⚽ *BLACK PEARL* ⚽
பீலே வழக்கமாகக் கூறுவார்... " *ஒரு போட்டியின் முடிவில் வெற்றி பெறுபவனே சாம்பியன், இரண்டாம்* *இடம் கிடைத்தாலும் தோல்வியுற்றவன் ஒன்றும் இல்லாதவனே..."*
காற்பந்துலகின் பெருமதிப்புடைய பீலே என்கிற எடிசன் அராண்டசு (Edson Arantes), காலமானார்..
அகவை 82.
மூன்று உலகக் கிண்ணிகளை வென்றவர் பீலே..
பிரேசில் நாட்டின் அரசராக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்தவர் பீலே.
*உலக வரைபடத்தில் பிரேசிலை அழுத்தமாகப் பதியவைத்தவர் பீலே* .
*வெறுங்காலுடன்
விளையாடத் தொடங்கிய ஏழைத் தாயின் மகன்.*
*17 வயதில் கோல் அடித்து, உலகத்தின் பார்வையை ஈர்த்தவர்* .
*பீலே பெயர் காரணம்* :
பீலேவின் தந்தையார் அவருக்கு வைத்தப் பெயர் எட்சன் அராண்டஸ், பிரபல அறிவியல் விஞ்ஞானி எடிசன் ஞாபகமார்த்தமாக அப்பெயரை சூட்டினார். வீட்டில் அவரை டீக்கோ (DICO) என்று செல்லமாக அழைப்பார்கள்.
ஆனால் பீலேவின் பள்ளிப்பருவத்தில் அவ்வூரின் பிரபலமான வாஸ்கோடகாமா அணியின் கோல் கீப்பரது பெயரான பைலே (Bile)வை பீலே என அந்த சிறுவன் எட்சன் உச்சரித்ததால் அவரது பள்ளித்தோழன் ஒருவன் பீலே என கிண்டலடித்ததால் உருவான பெயர் தான் உலகம் முழுக்க புகழ் பெற்றுப் பரவியுள்ள பீலே என்னும் இந்தப் பெயர்.
கால்பந்து உலகில் சாதனையாளர்களாகப் போற்றப்படுபவர்கள் பெரும்பாலும் மிகவும் வறுமையான நிலையில் இருந்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.
அதேபோல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையை வென்று சாதனை புரிந்தவர் தான் கால்பந்து உலகின் பிதாமகன் பீலே.
அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் விளையாடுவதற்கு ஒரு கால்பந்து கூட இல்லாமல், காலில் அணியும் காலுறையில் (sock) காகிதங்களால் நிரப்பி அதை ஒரு பந்து போன்ற வடிவத்திற்கு கொண்டு வந்து தன் தெரு நண்பர்களோடு உதைத்து விளையாடுவாராம்.
பந்தை கொண்டு விளையாடுவதற்கு பெயர் ஃபுட்பால் (Football) எனில் இந்த விளையாட்டிற்குப் பெயர் #ஃபுட்சால் (Futsol) என பெயர் வைத்திருந்தாராம் பீலே.
காலால் உதைபடும் கால்பந்து என்னும் ஒரு விளையாட்டு தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள மக்களால் தலையில் வைத்துக் கொண்டாப்படக் காரணமே பீலே என்னும் உன்னதமான கால்பந்தாட்டக்காரர் தான்.
தனது 15-வது வயதில் சான்டோஸ் என்னும் உள்ளூர் அணியில் சேர்ந்து விளையாடினார் பீலே.
கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் பீலே.
மூன்று முறை உலகக்கோப்பையை (1958, 1962 மற்றும் 1970) வென்ற ஒரே வீரர் பீலே.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் (1958-ஆம் ஆண்டு) மிக இளம் வயதில் (17 வருடங்கள் 234 நாட்கள்) கோல் அடித்த வீரர் பீலே.
தனது பிரேசில் நாட்டின் தேசிய அணிக்காக அடித்த 77 கோல்கள் உட்பட மொத்தம் 1283 கோல்கள் அடித்துள்ள மாபெரும் சாதனையாளர் பீலே.
கால்பந்து ஆட்டத்தில் பீலேவின் அசுர வேகத்தையும் விவேகத்தையும் கண்ட சர்வதேசதரத்தில் உள்ள பல வெளிநாட்டு அணிகள் பீலேவை தங்கள் அணிக்கு விளையாட கொத்திக்கொண்டு போகக் காத்திருந்தன.
பிரேசில் அரசு 1961-ஆம் ஆண்டு பீலே-வை பிரேசில் நாட்டின் சொத்து என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனாலோ என்னவோ பீலே தன் வாழ்நாளில் ஒருமுறை கூட ஐரோப்பிய கால்பந்து அணிகளில் இணைந்து விளையாடவில்லை.
*கால்பந்து உலகில் முதன் முதலாக 1000 கோல்கள் என்னும் அரிய மைல்கல்லை* எட்டியவர் ஜாம்பவான் பீலே.
1969-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி உலகப்புகழ் பெற்ற பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மராக்கானா ஸ்டேடியத்தில் வாஸ்கோடகாமா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பீலே தனது 1000-வது கோலை அடித்தார்.
உச்சபட்ச எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்தின் மிகுதியால் இரசிகர்கள் அனைவரும் கால்பந்து மைதானத்திற்குள் இறங்கி பீலேவைத் தலையில் தூக்கிக் கொண்டாடியதால் போட்டி 30 நிமிடங்கள் தடைபட்டதாம்.
சான்டோஸ் என்னும் அவரது ஊரில் அந்த நாளை (நவம்பர் 19) *பீலே நாள்* (Pele Day) என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து பீலேவைக் கெளரவித்தார்கள். இன்றளவும் பிரேசிலில் அது பீலே நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தான் முதன்முதலாக இணைந்த சான்டோஸ் அணிக்காகத் தொடர்ந்து 18 வருடங்கள் விளையாடினார் பீலே. அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் காஸ்மோஸ் (Newyork Cosmos) அணியில் விளையாட *7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில்* மூன்று ஆண்டுகள் விளையாட ஒப்பந்தமானார். அன்றைய தேதியில் உச்சபட்சமாக ஒரு கால்பந்து வீரர் வாங்கியத் தொகை அது.
பீலேவிடம் இது குறித்துக் கேட்டபோது "என்னை தங்கள் அணியில் இணைக்க மிலான், பேயர்ன், மாட்ரிட், பர்ர்சிலோனா உட்பட பல அணிகள் அதிகபட்ச தொகைக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்தன. ஆனால் நான் எங்கள் ஊரின் சான்டோஸ் அணிக்காக விளையாடுவதில் தான் மகிழ்ச்சியாக இருந்தேன். தற்போது இந்த அணியில் இணைந்திருப்பது கால்பந்து விளையாட்டை உலகளவில் எடுத்துச் செல்லவும் எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவும் தான்" என்றார்.
1970-களில் உள்நாட்டுக் கலவரமும் போர்மேகமும் சூழ்ந்திருந்த அல்ஜீரியா நாட்டில் பீலே கால்பந்து விளையாட வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக *இரு தரப்பும் 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார்கள்.* ஏனெனில் இருதரப்பு வீரர்களும் பீலே என்னும் அந்த மாமனிதனின் கால்பந்து விளையாட்டை நேரில் காணும் ஆர்வத்தோடு இருந்ததால்... இது எவ்வளவு பெரிய ஆச்சரியமான விஷயம்.
ஒரு கால்பந்தாட்ட போட்டி முடிந்ததும் இரு எதிரணி வீரர்களும் அவர்கள் விளையாடிய ஜெர்ஸியை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வது ஒரு மரபு. பீலே நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடும் போது எதிரணியின் அனைத்து வீரர்களும் பீலேவின் ஜெர்ஸியைக் கேட்பார்களாம்...
அச்சமயம் அவ்வணியின் மேனேஜராக இருந்த கார்டன் பிராட்லி கூறுகிறார் "சில சமயம் நாங்கள் ஒரு போட்டிக்கு *பீலேவிற்காக 25 முதல் 30 ஜெர்ஸி வரை தயார் செய்ய* வேண்டியிருந்தது. இல்லாவிடில் அந்தக் கால்பந்து மைதானத்தை விட்டு வெளியேறவே முடியாது. அந்த சமயத்தில் பீலேவை உலகம் முழுக்க உள்ள கால்பந்து இரசிகர்களும், கால்பந்தாட்ட வீரர்களும் எந்தளவிற்கு நேசித்திருக்கிறார்கள், உயரே வைத்திருந்திக்கிறார்கள் என்பதற்கு புல்லரிக்க வைக்கும் இச்சம்பவமே ஒரு உதாரணம்.
டைம்ஸ் ஆஃப் லண்டன் (Times OfLondon) என்னும் உலகப்புகழ் பெற்ற பத்திரிகை ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தது. " *நீங்கள் பீலே என்பதை எவ்வாறு உச்சரிப்பீர்கள்* என்று கேட்டு அதற்கு G-O-D (க-ட-வு-ள்)" என்று விளக்கமும் கொடுத்து புகழ்மாலை சூட்டியது.
பீலேவிற்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா. "மாரடோனா கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு கால்பந்து வீரர்" என்பார் பீலே. ஆனால் மாரடோனாவோ "அவர் (பீலே) அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம் பீலே" என்பார்.
பீலே 1995 முதல் 1998 வரை பிரேசில் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். UNISEF என்னும் ஐ.நா அமைப்புடன் இணைந்து தான் பிறந்த ஊருக்காகவும், பிரேசில் நாட்டில் தெருவோரம் கால்பந்து விளையாடும் வசதி வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்காகவும் எண்ணற்ற உதவிகள் புரிந்துள்ளார்.
20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக (Athelete) அகில உலக ஒலிம்பிக் கமிட்டி 1999-ஆம் ஆண்டு அறிவித்து பீலேவைக் கெளரவித்தது.
பீலே வழக்கமாகக் கூறுவார்... "ஒரு போட்டியின் முடிவில் வெற்றி பெறுபவனே சாம்பியன், இரண்டாம் இடம் கிடைத்தாலும் தோல்வியுற்றவன் ஒன்றும் இல்லாதவனே..."
கடைசி வரை அவர் தனது நெஞ்சில் சுமந்த அந்த வெற்றி என்னும் தீப்பொறிதான் அவரது கால்பந்து விளையாட்டில் அனலாகத் தெறித்தது எனலாம். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது வெற்றியுடனும் புகழ் மாலையுடனும் மாவீரனாக இன்னமும் பல நூற்றாண்டுகள் வலம் வருவார் எங்கள் பீலே.