Sunday, 28 August 2022

கதைகள் STORY - சிகரெட் வியபாரி


சிகரெட் பிடிக்கிற பழக்கமே இல்லாத ஒரு ஊருக்கு, சிகரெட் வியாபாரி ஒருத்தர் வந்தார். வியாபாரம் பண்ணிப் பார்த்தார். யாரும் அந்த ஊர்ல வாங்குற வழியைக் காணோம்.


 இவரு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சார். உடனே, சிகரெட்டோட பெருமைகளை பத்தி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சார். எப்படி தெரியுமா?


* புகைப் பிடிக்கிறவன் எவனையும் நாய் கடிக்கிறதில்லை !


*புகைப் பிடிக்கிறவனுக்கு  ஊனமற்ற குழந்தை பிறக்கிறதில்லே!


* புகைப்  பிடிப்பவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான் !


*புகைப் பிடிக்கிறவனை முதுமை நெருங்காது!


 அப்படின்னு சொல்லி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சார்.


ஜனங்களலாம் பார்த்தாங்க.... இதுல நிறைய சௌகரியம் இருக்கும் போலன்னு நினைச்சாங்க.


 உடனே, சிகரெட் வாங்க ஆரம்பிச்சாங்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு வருஷம் ஆச்சு .....


சிகரெட்டின் மகிமை பற்றி அந்த வியாபாரி சொன்னது பொய்யின்னு அனுபவத்துல புரிஞ்சுகிட்டார் ஒருத்தர் .உடனே வியாபாரியைத் தேடிட்டு போனார்.


"என்னையா நீ.... இந்த ஊர் ஜனங்களை பொய் சொல்லி ஏமாத்திப்புட்டியே....'ன்னு சண்டை போட்டார் .


ஆனால் அந்த ஆள் கொஞ்சம் கூட அசரல."நான் சொன்னது எதுவும் பொய் இல்லை.....ன்னு" சாதித்தார்.


 இவரு விடலே.....


"அது எப்படி ? புகைப் பிடிக்கிறவனை நாய் கடிக்காதுன்னு சொன்னியே அது பொய் தானே...." என்றார்.


 இதற்கு அந்த வியாபாரி விளக்கம் கொடுத்தார்.


"அப்படி இல்லைங்க புகைப் பிடிக்கிறவன் உடம்புல பலம் இருக்காது. தள்ளாடி தள்ளாடி தான் நடப்பான். அதனால, எப்பவும் கையில ஒரு ஊன்றுகோல் வச்சிருப்பான். கையில குச்சியோட இருக்கிறவனை பார்த்தால் நாய் நெருங்காது.அதுதான் அப்படி சொன்னேன் ....."என்றார்.


"ஊனமுற்ற குழந்தை பிறக்காதுன்னு சொன்னீயே அது எப்படி?ன்னு  கேட்டார், இவர்.


"உண்மையில் அவனுக்கு எந்த குழந்தையும் பிறக்காது. அதனால, ஊனமுற்ற குழந்தையும் பிறக்காது தானே."


 "புகைபிடிக்கிறவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான் சொன்னியே...." என்றார்.


"ஆமாம், புகை பிடிப்பவன் ராத்திரிபூரா இருமிக்கிட்டே இருப்பான். அதனால், ஆள் முழிச்சுக்கிட்டு இருக்கான்னு நினைச்சு திருடன் வரமாட்டான்...." என்றார், இவர்.


 "எல்லாம் சரி, புகைபிடிக்கிறன் முதுமை அடையறது இல்லையான்னு சொன்னியே, அது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார் .


"முதுமை வருவதற்கு முன்னாடி அவன் செத்துப் போயிடுவான் சார். அப்புறம் எப்படி அவனை முதுமை நெருங்கும்....ன்னு கேட்டார்,இவர்.


"நியாயம் தான் ... ன்னு" என்று சொல்லிவிட்டு இவர் திரும்பி வந்துட்டார் .


இந்த கதையிலிருந்து வியாபார தந்திரம்னா என்னங்கிறதையும், அரசியல் கட்சிகளின் வாக்குறிதி என்ன என்பதையும், புகைப்பழக்கம் எவ்வளவு கெடுதல்ங்கறதையும் புரிஞ்சிக்கலாம்....

ஆக்சுவலா CA ங்கிற Chartered Accountant படிப்புன்னா என்ன ?

 ஆக்சுவலா CA ங்கிற 

Chartered Accountant படிப்புன்னா என்ன ? 


எனக்கு அது பத்தி ஒண்ணுமே தெரியாது.” என்று மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கும் CA மாணவரிடம் கேட்டேன். 


அவர் எனக்கு பொறுமையாக விளக்கினார். 


நான் புரிந்து கொண்டதை இப்படி போர்டில் எழுதி போட்டோ எடுத்துக் கொண்டேன். 


அவர் சொல்லி நான் புரிந்து கொண்டதில் கொஞ்சம் கூடுதல் குறைவு இருக்கலாம். 


ஆனால் எசென்ஸ்  இதுதான். 


சி.ஏ வின் மொத்தம் நான்கு கட்டங்கள் உள்ளன. 


கட்டம் ஒன்று - Foundation Course 

கட்டம் இரண்டு - Intermediate Course 

கட்டம் மூன்று - ஒரு அனுபவம் வாய்ந்த Chartered Accountant யிடம் பயிற்சியாளாராக சேர்ந்து பணியாற்றுவது. 

கட்டம் நான்கு - Final Exams


கட்டம் ஒன்று - Foundation Course 


சி.ஏ படிப்புக்குள் காலெடி வைக்கும் மாணவர்கள் முதன் முதலில் எழுத கூடிய தேர்வுகள் அடங்கிய தொகுப்பைத்தான்  Foundation Course  என்கிறார்கள். 


இதில் நான்கு பேப்பர்கள் வருகின்றன. 


1. Accountancy  - 100 மார்க் - எழுத்து தேர்வு 

2. Law & English - 100 மார்க் - எழுத்து தேர்வு 

3. Maths - 100 மார்க். - நான்கு விடைகளில் விடை கண்டுபிடி தேர்வு (MCQ)

4. Economics and commerce - 100 மார்க். - நான்கு விடைகளில் விடை கண்டுபிடி தேர்வு (MCQ)


 Accountancy  மற்றும்  Law & English தேர்வுகளை எழுத வேண்டும். கேள்வி பதில் டைப் தேர்வு இது. இதில் Negative மதிப்பெண்கள் கிடையாது. 


Maths மற்றும் Economics & commerce தேர்வுகள் Multiple Choice Question அதாவது நான்கு விடைகளில் சரியான விடைகள் கண்டுபிடிக்கும் தேர்வாகும்.


இத்தேர்வுகளில் Negative மதிப்பெண்கள் உண்டு. நீங்கள் ஒரு கேள்வியை தவறாக எழுதி விட்டால் 0.5 மதிப்பெண் அதாவது அரைமதிப்பெண் கழித்து விடுவார்கள். 


இந்த நான்கு பேப்பர்களும் ஒவ்வொரு பேப்பருக்கும் பாஸ் மதிப்பெண் 40 ஆகும். 


நூற்றுக்கு நாற்பது மார்க் எழுதினால் பாஸாகிவிடலாம். 


சரி நான்கு பாடங்களில் ஒரு மாணவர் 40 + 40 + 40 + 40 எடுத்து 160 மார்க் எடுத்து பாஸ் ஆனால் அது செல்லுமா ? 


செல்லாது. நான்கு பாடங்களிலும் சேர்த்து ஒரு மாணவர் மொத்தமாக 200 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 


இன்னொரு விஷயம் நான்கு பாடங்களை செமஸ்டர் செமஸ்டராக அரியர் க்ளியர் செய்வது போல செய்ய முடியாது. 


ஒரு பாடத்தில் பெயிலானாலும் மறுபடி நான்கையும் சேர்த்துதான் எழுத வேண்டும். 


ஆக CA படிப்பு Foundation Course  களில் மூன்று சவால்கள் இருக்கின்றன. 


சவால் ஒன்று - ஒரு பாடம் பெயிலானாலும் நான்கையும்  சேர்த்துதான் எழுத வேண்டும். ஒவ்வொன்றாக க்ளியர் செய்ய முடியாது. 


சவால் இரண்டு : நான்கு பாடங்களில் பாஸ் ஆனால் மட்டும் போதாது. ஒட்டு மொத்தமாக நான்கு பாடங்களிலும் சேர்த்து 200 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 


சவால் மூன்று : நான்கு பாடங்களில் இரண்டு பாடங்களுக்கு நெகட்டிவ் மார்க்ஸ் உண்டு. 


இந்த மூன்று சவால்களையும் ஒரு மாணவர் கடக்கும் போதுதான் அவர் Foundation Course யில் பாஸ் ஆகிறார். 


உண்மையில் Foundation Course  க்ளியர் செய்வது பெரிய சவால்தான். ஆனால் செய்து முடிக்க முடியாத சவால் அல்ல. செய்து முடிக்க கூடியதே அது. 


கட்டம் இரண்டு - Intermediate Course 


இதில் இரண்டு குரூப்கள் இருக்கின்றன. 


Group 1 - எட்டு பாடங்கள். 


Group 2 - எட்டு பாடங்கள். 


Group 1 வும் மொத்தமாக பாஸ் ஆக வேண்டும். 

Group 2 வும் மொத்தமாக பாஸ் ஆக வேண்டும்.


ஆனால் Group 1 ம் Group 2 ம் ஒரே சமயத்தில் பாஸ் ஆக வேண்டும் என்ற விதி இல்லை. 


கட்டம் மூன்று - ஒரு அனுபவம் வாய்ந்த Chartered Accountant யிடம் பயிற்சியாளாராக சேர்ந்து பணியாற்றுவது. 


Foundation மற்றும் Intermediate க்ளியர் செய்த பிறகு ஒரு தகுதிவாய்ந்த Chartered Accountant யிடம் பயிற்சியாளாராக சேர்ந்து பணியாற்ற வேண்டுமாம். 

அங்கு மாணவர் என்ன வேலை செய்கிறார் என்பதற்கான ஆதாரங்களை அவர் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். 


குறைந்தது இந்த பிரீயட் எட்டு மாதங்களில் இருந்து ஒருவருடம் பணியாற்றி இருக்க வேண்டும். 


ஆனால் பொதுவாக இந்த கட்டத்திலேயே மாணவர்கள்  Chartered Accountant தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒருவருடம் என்றில்லாமல் அந்த தகுதி வாய்ந்தவரிடம் கால எல்லையின்றி  பணியாற்றியபடியே Final தேர்வுகள் எழுதுகிறார்கள்.


கட்டம் நான்கு - Final Exams 


இதிலும் Group 1 வில் எட்டு பேப்பர்கள். 

Group 2 வில் எட்டு பேப்பர்கள். 


ஒவ்வொரு குரூப்பாக மொத்தமாக எழுதி பாஸ் ஆகிக் கொள்ளலாம். 


இதிலும் அனைத்து பேப்பர்களை க்ளியர் செய்தால் அவர் ஒரு முழுமையான Chartered Accountant தகுதி பெறுகிறார். 


ஒரு காலத்தில் மருத்துவப்படிப்புகளை ஒரு சில சாதியினரே அவர்கள் கையில் வைத்திருந்தார்கள். 


இப்போது அனைத்து சாதியினரும் படிக்கிறார்கள். 


ஒரு காலத்தில் வக்கீல் படிப்பை ஒரு சில சாதியினரே அவர்கள் கையில் வைத்திருந்தார்கள். 


இப்போது அனைத்து சாதியினரும் படிக்கிறார்கள். 


அது போல Chartered Accountant படிப்பிலும் அனைத்து சாதியினரும் படித்து வர வேண்டும். 


அப்படி படிக்க ஆரம்பகட்டமாக அந்த படிப்பின் தேர்வு முறைகள் தெரிந்திருக்க வேண்டும். 


சிஏ  என்றால் ஏதோ ரொம்ப கடினமானது. அதை எல்லாம் படிக்கவே முடியாது என்று மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு “நமக்கெல்லாம் அது வராதுப்பா” என்று  அதை முயற்சி செய்யாமலே இருப்பது தவறான அனுகுமுறையாகும்.


சிஏ கடினபடிப்பென்றால் ஏன் கடினபடிப்பு ? எப்படி கடினபடிப்பு ? அதை படிக்க எந்த மாதிரியான உழைப்பு வேண்டும்? எந்த எந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் விவரமாக தெரிந்து கொள்வதுதான் சரியான அனுகுமுறையாகும்.


அப்படி லோயர்  மிடில் க்ளாஸ் குடும்பங்களில் CA பற்றிய ஆரம்ப அறிவைப் பெற்று அதை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பதுதான் CA படிப்பை அனைத்து சாதியினரும் படித்து சமத்துவம் ஏற்பட வழிவகுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த 15 நிமிட வகுப்பை எனக்காக எடுத்த அந்த மாணவருக்கு நட்பும் அன்பும்...

Sunday, 14 August 2022

அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! (Benifits of studying in TN govt. schools)

 அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

(Benifits of studying in TN govt. schools)


அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகை இருப்பதால் பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கிடைக்கும் நன்மைகள்!


1. அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு

2. தொழில்முறை படிப்புகளில் ஒதுக்கீடு

3. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோரும் ஊக்கத்தொகை

4. வழக்கமான சலுகைகள்/விலையில்லா பொருட்கள்

5. தமிழ்‌ வழியில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 20 சதவீதம்‌ முன்னுரிமை


இந்த சலுகைகளை விரிவாக பார்ப்போம்:


1. அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு 


மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 2020 ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. 


அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.


பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், முனிசிபல், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் அரசுப் பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும். 


பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.


இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் இந்த சட்டம் தெரிவிக்கிறது.


7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுனால், 700-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதி


🔹 அரசுப்பள்ளி மாணவராக, 6-12 வரை படிப்பு அல்லது RTE முறையில் 8-12 தனியார் பள்ளியில் படிப்பு. 

(அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை)


🔹12ஆம் வகுப்பில் Physics, Chemistry மற்றும் Biology/Botany/Zoology/Biotechnology பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி


🔹 நீட் தேர்வில் தேர்ச்சி (145-300 மதிப்பெண் எடுத்தால் கூட போதும்)


🔹 அரசுப்பள்ளியில் படித்தற்கான சான்றிதழுடன், மருத்துவ சேர்க்கை/கலந்தாய்வுக்கு விண்ணப்பம்


****


2. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் (Professional courses) ஒதுக்கீடு


தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2020 ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் சுமார் 400 மாணவர்கள் வரை பயனடைந்தனர்.

இதேபோல பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 


இதையடுத்து, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவை ஆய்வுசெய்து பரிந்துரை வழங்குவற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் குழுவை தமிழக அரசு கடந்த 2021, ஜூன் 15-ம் தேதி அமைத்தது.


இந்தக் குழு சமர்பித்த அறிக்கையில், தொழில்நுட்பப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்துக்கு குறையாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, 2021, ஜூன் 26-ம் தேதி தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினர்மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.


இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:


தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 முதல் 4 சதவீதம் வரையே இருந்தது. இதை சரிசெய்யவே சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டில் 1.9 லட்சம் இடங்கள் வரை இறுதியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் சுமார் 14,250 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.


1,253 இடங்கள்


குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில்மொத்தமுள்ள 8,840 இடங்களில் 663 இடங்களும் அரசுமற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 7,860 இடங்களில் 590 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு அண்ணாபல்கலை.யில் 0.83 சதவீதமும், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 7.4 சதவீதமும் சேர்க்கை இருந்தது கவனிக்கத்தக்கது.


இதேபோல, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மொத்தமுள்ள 580 இடங்களில் 44 இடங்களும் வேளாண் இளநிலை படிப்புகளில் உள்ள 4 ஆயிரம் இடங்களில் 300 இடங்கள் வரையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.


இதுதவிர இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள 140-ல் 10 இடங்கள் ஒதுக்கப்படும். 


மேலும், சட்டப் படிப்புகளுக்கு அரசுஒதுக்கீட்டில் 1,651 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 124 இடங்கள் வரை மாணவர்களுக்கு கிடைக்கும். அதன்படி, தொழிற்கல்வி படிப்புகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 15 ஆயிரம் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன்பெறுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


****


3. கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை.


அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வகுப்பு வரை படித்த மாணவிகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்ந்தால் அந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.


இந்தத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


மேலும், இந்த ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஒவ்வொரு மாணவிகளின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாணவிகள் ஏதேனும் கல்வி உதவித்தொகை வாங்கி கொண்டிருந்தாலும் இந்த ரூ.1000 உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.


கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கிட ரூ. 698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


***


4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்


1. சீருடை (1 முதல் 12 வரை)

2. இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை

3. மடிக்கணினி (12 வகுப்பு)

4. காலணிகள் (1 முதல் 10)

5. புத்தகப்பை (1 முதல் 12 வரை)

6. கணித உபகரணப்பெட்டி்(6 முதல் 10 வரை)

7. வண்ணப் பென்சில்கள் (3 முதல் 5 வரை)

8. வண்ணக் கிரையான்கள் (1 முதல் 2 வரை)

9. நிலவரைபடநூல் (6 முதல் 10 வரை)

10. நோட்டுப்புத்தகங்கள் (1 முதல் 10 வரை)

11. பாடநூல்கள் (1 முதல் 12 வரை)

12. மிதிவண்டி (11)

13. பேருந்துப் பயண அட்டை (1 முதல் 12 வரை)

14. சத்துணவுத் திட்டம் (1 முதல் 8 வரை)

15. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி உதவி (1 முதல் 12 வரை)

16. கம்பளிச் சட்டை (குளிர் நிறைந்த பகுதிகளில்)1 முதல் 8 வரை

17. சதுரங்க விளையாட்டு (2 முதல் 12 வரை)


****


5. அரசுப்‌ பள்ளியில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 20 சதவீதம்‌ முன்னுரிமை


10, 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.


முன்பு தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்லூரியில் தமிழ்வழியில் படித்ததாக சிலர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, இட ஒதுக்கீடு பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


இதைத் தொடர்ந்து 6-ம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் எனவும் 10, 12-ம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


அதைக் கொண்டே டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி உள்ளிட்ட தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆகவே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து அவர்களது கனவுகளை நினைவாக்குங்கள்!

Wednesday, 3 August 2022

4. MORAL STORIES நீதி கதைகள்

 நீதிக்கதை:


காது கேட்காத தவளை 🐸


  மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.


அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

Tuesday, 2 August 2022

3. Moral stories நீதிக்கதை

  நீதிக்கதைகள் 

நம்பிக்கையை விடவே விடாதே 

  ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதென்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.

மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் இருந்து விடுவித்து கயிற்றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப்பித்து என்னாகப் போகிறது என அங்கேயே நின்றுவிடும்.

ஒருமுறை, தன் மகனுடன் வேட்டைக்கு வந்த ஒரு அரசன், ""குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே!'' என்று வேடனிடம் கேட்டான்.

""மன்னா! கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,'' என்றான்.

இந்த யானைகளைப் போல், நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை விட அதிக முயற்சி எடுக்க வேண்டும்

குட்டி கதை

  ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்க...