தென்னிந்தியாவின் ஜான்சிராணி...!!
பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெண்மணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பலமுறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சலை அம்மாளை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
அஞ்சலை அம்மாள் 1890ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் தேதி கடலூரில் முதுநகரில் முத்துமணி, அம்மாக்கண்ணு தம்பதிக்கு மகளாக பிறந்தார்.
கல்வி :
அஞ்சலை அம்மாள் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின் பள்ளிபடிப்பை தொடரவில்லை.
திருமண வாழ்க்கை :
அஞ்சலை அம்மாள் முருகப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
விடுதலை போராட்டத்தில் அஞ்சலை அம்மாளின் பங்கு :
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி ஆவார்.
தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவிட்டார்.
1927ஆம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் பங்கேற்றார். தனது ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும், இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து 1930ஆம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933ஆம் ஆண்டு சட்டமறுப்பு மறியலிலும், 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் அஞ்சலை அம்மாள் கலந்து கொண்டார்.
1931ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு, அஞ்சலை அம்மாள் தலைமை தாங்கினார். 1942ஆம் ஆண்டும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். அஞ்சலை அம்மாள் சிறையில் காரல் மார்க்சின் 'தாஸ் காபிடல்" எனும் நூலை மூலதனம் என்று மொழியாக்கம் செய்தவர்.
ஒருமுறை கடலூருக்கு காந்தியடிகள் வந்தபோது அவரைச் சந்திப்பதற்கு தடை விதித்திருந்தனர். அஞ்சலை அம்மாள் பர்தா வேடம் அணிந்து குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார். அதனால் காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைத் 'தென்னாட்டின் ஜான்சிராணி" என்றழைத்தார்.
1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்னர், அஞ்சலை அம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார்.
அஞ்சலை அம்மாளின் மறைவு :
1961ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆம் தேதி அஞ்சலை அம்மாள் காலமானார்.
Thanks to Dailyhunt